EKSKLUSIFSELANGOR

இளைஞர் மேம்பாடு, பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்போம்- கோத்தா கெமுனிங் வேட்பாளர் பிரகாஷ் வாக்குறுதி

ஷா ஆலம், ஜூலை 25- விரைவில் நடைபெற இருக்கும் மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் கோத்தா கெமுனிங் தொகுதியில்  இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தாம் முன்னுரிமை அளிக்க உள்ளதாக
அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளரான
பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.

இது தவிர, அத்தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை வசதிகள்
பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அதே வேளையில் மத்திய மற்றும் மாநில
அரசுகள் அமல்படுத்தியுள்ள பல்வேறு உதவித் திட்டங்களை பி40 தரப்பினர்
குறிப்பாக இந்தியர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதை தாம்
உறுதி செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள  புக்கிட் கெமுனிங்கில் மலேசிய மறுசுழற்சி பொருள்
சங்கத்தின் தலைவரும் மலேசிய செம்பிறைச் சங்கத்தின் கிள்ளான்
மாவட்ட பிரிவின் தலைவருமான டத்தோ ஜோ. சரவணனுடன் நடத்திய
சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.
இளைஞர்கள் வர்த்தகத் துறையில் ஈடு படுவதை ஊக்குவிக்கும் நோக்கில்
வர்த்தகம் மற்றும் இலக்கவியல் முறையில் சந்தைப்படுத்துவது
தொடர்பான பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கான
திட்டங்களையும் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

எஸ்.பி.எம் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக உயர் கல்விக்
கூடங்களின் ஒத்துழைப்புடன் இணைய வழி கல்வித் திட்டத்தை
அமல்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம்
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி அவர்கள் சான்றிதழ் அல்லது
பட்டப் படிப்பை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கும் பல்வேறு சமூக நலத்
திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியாமல் இருக்கின்றனர். இத்தகைய
திட்டங்கள் அவர்களைச் சென்றடைவதை தாம் உறுதி செய்வதும் தனது
நோக்கங்களில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரச்சனை, தமிழ்ப்பள்ளி
மேம்பாடு, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பிரச்சனைகளையும்
உரிய முறையில் கவனித்து தக்க தீர்வினை ஏற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இத்திட்டங்களை நான் அமல்படுத்துவதற்கு கோத்தா கெமுனிங் தொகுதி
வாக்காளர்களின் ஒருமித்த ஆதரவு எனக்குத் தேவை. இந்த தேர்தலில்
அனைத்து இந்திய சமூகத்தின் ஆதரவையும் நான் பெரிதும்
எதிர்பார்க்கிறேன் என அவர் கூறினார்.


Pengarang :