SELANGOR

சர்வதேச ஆவணப்பட விழாவில் 200 ஆவணப்பட வீடியோக்கள் போட்டியிட உள்ளன – முதன்மை பரிசு RM5,000 மானியம் வடிவில்

கோலாலம்பூர், ஜூலை 26: வாக் தி டோக்: சர்வதேச ஆவணப்பட விழாவில் மொத்தம் 200 ஆவணப்பட வீடியோக்கள் போட்டியிட உள்ளன. இப்போட்டியில் முதன்மை பரிசாக RM5,000 மானியம் வடிவில் வழங்கப்படும்.

லங்காவியில் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை நடைபெற விருக்கும் இந்நிகழ்வின் பங்கேற்பு கடந்த ஆண்டு போட்டியிட்ட 70 வீடியோக்களுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளதாக விழாவின் இயக்குனர் நுராஷிகின் ஜஹாருடின் கூறினார்.

“சர்வதேச ஆவணப்பட விழா இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் இடமிருந்து 200 வீடியோ உள்ளீடுகளை பெற்றுள்ளோம்.

“இப்போட்டியில் சிறந்த ஆவணப்படம் மற்றும் சிறப்பு ஜூரி விருது என இரண்டு பிரிவுகள் உள்ளன.

“ஒரு நாட்டில் அழகின் கூறுகளை முன்னிலைப் படுத்தும் ஆவணப் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த விழாவை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று அவர் நேற்று வொர்க், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் நடைபெற்ற விழாவின் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அனைத்து வீடியோக்களும் மலேசியா, ஜப்பான், இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்த நான்கு அனுபவம் வாய்ந்த நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.

மலேசியாவில் உள்ள பல்வேறு சுவாரஸ்யமான இடங்களின் அழகை வெளிநாட்டவர்களுக்கு காட்டும் உள்ளூர் உள்ளடக்க வழங்குனர்களை இந்த விழாவின் மூலம் மேலும் ஊக்குவிக்க முடியும் என சுற்றுலா மலேசியா தயாரிப்பு இயக்குனர் டத்தின் ரஃபிடா இட்ரிஸ் கூறினார்.

மேலும், விழாவில் நடைபெறும் பட்டறைகள் மூலம் ஆவணப்பட வீடியோக்களை தயாரிப்பதில் பல்வேறு சுவாரசியமான நுட்பங்களையும் பங்கேற்பாளர்கள் கற்றுக் கொள்ளலாம்,” என்றார்.

சர்வதேச ஆவணப்பட விழாவைச் சுற்றுலா மலேசியா, ஃபினாஸ் மற்றும் திங்க் சிட்டி யாயாசன் ஹசானா ஆகியவற்றுடன் இணைந்து வாக்பவுட் ஆசியா ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :