ECONOMYMEDIA STATEMENT

தாமான் டெம்ப்ளர் வேட்பாளர்- போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு முன்னுரிமை அளிப்பேன்

கோம்பாக், ஜூலை 30- அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால்  போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தாம் முன்னுரிமை அளிக்கவுள்ளதாக தாமான் டெம்ப்ளர் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் செலாயாங் பாண்டாங் கேல்டெக்ஸ் பெட்ரோல் நிலையம் தொடங்கி ரவாங் இணைப்புச் சாலை வரையிலான 8 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக அன்ஃபால் சஹாரி தெரிவித்தார்.

இங்கு வசிக்கும் பெருமபாலோர் கோலாலம்பூரில் வேலை செய்கின்றனர். இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனை அவர்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

நெரிசலைத் தவிர்ப்பதற்காக அவர்கள் அதிகாலையிலே வேலைக்கு புறப்பட வேண்டியுள்ளது. வேலைக்கு செல்லும் போதும் வீடு திரும்பும் போதும் அவர்கள் கடுமையான போக்குவரத்து  நெரிசலில் சிக்க வேண்டி வருகிறது என்றார் அவர்.

இன்று காலை இங்குள்ள தம்பஹான் ரவாங் கம்போங் மிலாயு பத்து 16 பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் மற்றும் தாமான் டெம்ப்ளர் தொகுதி முன்னாள் உறுப்பினர் முகமது சானி ஹம்சான் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை தாம் தொடரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :