MEDIA STATEMENTNATIONAL

எல்மினா விமான விபத்து-  சவப் பரிசோதனையில் 10 தடயவியல் நிபுணர்கள் பங்கேற்பு

கிள்ளான், ஆகஸ்ட் 18 – ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே நேற்று நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் பலியானவர்கள் மீதான பிரேத பரிசோதனையில் பத்து தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கிள்ளான்,  தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜுல்கர்னைன் முகமட் ராவி தெரிவித்தார்.

அந்த தடயவியல் நிபுணர்களில்  நால்வர் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்றும் எஞ்சியோர் அருகிலுள்ள மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.

இந்தக்   தடயவியல் குழு உடற்கூறு நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார உதவியாளர்களை உள்ளடக்கியது என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார் .

நேற்று மாலை 6 மணி முதல் செய்தியாளர் குழு ஒன்று தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் தடயவியல்  துறை வளாகத்தில் கூடியுள்ளது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

மருத்துவமனையில் ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் பிரேதப் பரிசோதனைக்கு முதற்கட்ட ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். அந்த வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்திலும் பல சிறிய கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும் இரவு 7 மணியளவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நால்வரடங்கிய போலீஸ் குழு அங்கு வந்தது.

நேற்று மதியம் 2.50 மணியளவில் கத்ரி நெடுஞ்சாலையில் பீச் கிராஃப்ட்  390 (பிரீமியர் 1) ரக இலகு விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Pengarang :