MEDIA STATEMENTNATIONAL

விமான விபத்து- சவப் பரிசோதனை முடிந்தது- டி.என்.ஏ. முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்

கிள்ளான், ஆக 19- பண்டார் எல்மினா அருகே கத்ரி நெடுஞ்சாலையில்
நேற்று முன்தினம் நிகழ்ந்த விமான விபத்தில் உயரிழந்தவர்கள் மீது
நடத்தப்பட்ட சவப் பரிசோதனை முற்றுப் பெற்ற நிலையில் டி.என்.ஏ.
எனப்படும் மரபணு சோதனையின் முடிவுக்காக போலீசார்
காத்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சமார் 300 உடல் பாகங்கள் மரபணு
சோதனைக்காக இரசாயன இலாகாவுக்கு அனுப்பப்பட்ட வேளையில்
அவற்றில் 30 விழுக்காட்டிற்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக சிலாங்கூர்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
இந்த சவப்பரிசோதனையில் உடற்கூறு நிபுணர்கள் மற்றும் தடயவில்
நிபுணர்கள் உள்பட 30 பேர் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.
உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டியான
முகமது ஹபிஸ் முகமது சாலேவின் மரபணு முடிவு கிடைக்கப்பெற்ற
நிலையில் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று
அவர் தெரிவித்தார்.
மரபணு மாதிரிகளை முழுமைப் படுத்தும் நடவடிக்கையில் இரசாயனத்
துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி வரும்
திங்கள்கிழமைக்குள் முற்றுப் பெறும் என நம்புகிறோம் என கிள்ளான்,
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் தடயவியல் பிரிவில்
செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறினார்.
மேலும் ஒருவரின் உடல் இன்று அடையாளம் காணப்படும் எனத் தாங்கள்
எதிர்பார்ப்பதாகவும் அது நாளை சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரிடம்
ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை போலீசார் எண்மரின் கைவிரல் ரேகைகளைப் பெற்றுள்ளனர்
என்று அவர் மேலும் சொன்னார்.
இதனிடையே, மிகவும் சிதைந்த நிலையில் இருக்கும் உடல்களை
இறந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வர் எனத் தாம்
எதிர்பார்ப்பதாகவும் ஹூசேன் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல் பாகங்கள் தீயில் எரிந்து போனதோடு
அவற்றிலிருந்து மரபணு மாதிரியைப் பெற முடியவில்லை என்றும் அவர்
குறிப்பட்டார்.

Pengarang :