ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலிவு விற்பனையை அடுத்தாண்டும் தொடர மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், செப் 22- பொது மக்களிடமிருந்து கிடைத்து வரும் அபரிமித ஆதரவைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனையை அடுத்தாண்டும் தொடர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கோழி, முட்டை, இறைச்சி, மீன், சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் இந்த திட்டம் தரம் உயர்த்தப்பட்டு புதிய பெயரில் நடத்தப்படும் என்ற விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு   உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம்  கூறினார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் இந்த திட்டத்தை இவ்வாண்டு மத்தியில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். எனினும் மக்கள் மீதான பரிவின் அடிப்படையில் ஏஹ்சான் மற்றும் ரஹ்மா திட்டங்களைத் தொடர்வது குறித்து தற்போது பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ். ஆர்க்கிட் மண்டபத்தில் நடைபெற்ற ஏஹ்சான் விற்பனை பாராட்டு விருந்து மற்றும் பி.கே.பி.எஸ்.சின் புதிய சின்னம் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனைக்கு உதவித் தொகையாக 4 கோடி வெள்ளியை மாநில அரசு இதுவரை செலவிட்டுள்ளதாகக் கூறிய அவர், மாநிலம் முழுவதும 2,850 இடங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனையின் மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைந்தனர் என்றார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக விற்பனையாகாமல் தேங்கிருந்த விவசாயப் பொருள்களை விற்பனை செய்யும் நோக்கில் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் வேளாண் பரிவுத் திட்டத்தை கடந்த 2021 ஜூன் மாதம் 21ஆம் தேதி மாநில அரசு தொடக்கியது.

இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த 2022ஆம் ஆண்டு மலிவு விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2022 பிப்ரவரி மாதம் இந்த திட்டம் மக்கள் பரிவுத் விற்பனைத் திட்டம் என பெயர் மாற்றம் கண்டது. கடந்த 2022 ஜூலை வரை தொடர்ந்து இந்த திட்டம் அதே ஆண்டு ஆகஸ்டு மாத த்திற்குப் பின்னர் ஏஹ்சான் ராக்யாட் விற்பனைத் திட்டம் என பெயர் மாற்றம் கண்டது.


Pengarang :