ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

ஸ்ரீமூடாவில் தொடர் மழை-வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தீவிரம்

ஷா ஆலம் செப் 22- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் அண்மைய தினங்களாக பெய்து வரும்  கன மழையைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்  கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஷா ஆலம் மாநகர் உறுப்பினர் ராமு நடராஜனுடன் ஸ்ரீமூடா வட்டாரத்தில் களமிறங்கிய அவர், கால்வாய்களில்   நீரோட்டம் சீராக இருப்பதை உறுதி செய்ததோடு இக்குடியிருப்புப் பகுதியில் கிள்ளான் ஆற்றையொட்டி அமைக்கப்பட்டுள்ள மதகையும் பார்வையிட்டார். 

நீர் பெருக்கின்போது கிள்ளான் ஆற்று நீர் ஸ்ரீமூடா குடியிருப்புப் பகுதியில் நுழைவதைத்  தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மதகின் செயல்பாடுகள்  சிறப்பாக உள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.

மேலும், கால்வாய்களில் நீரோட்டம் சீராக இருந்ததோடு மழை நீரை விரைந்து வெளியேற்றுவதற்காக ஆங்காங்கே நீர் இறைப்பு பம்ப் இயந்திரங்களும் தயார் நிலையில் லைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தைத் தடுப்பதற்காக ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு வரும் கால்வாய் விரிவாக்கம், வெள்ள நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்பு, நீர் இறைப்பு இயந்திரங்களைப் பொருத்துவது போன்றத் திட்டங்கள் முழுமைப் பெற்றவுடன் ஸ்ரீமூடா வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சனைக்கு  தீர்வு காண முடியும் என்றார் அவர்.

நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்ரீமூடாவும் ஒன்றாகும்.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் பலவேறு வெள்ளத் தடுப்புப் பணிகளை மாநில அரசும் மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றன.


Pengarang :