MEDIA STATEMENT

மூன்று இலங்கை ஆடவர்கள் படுகொலை-  இரு இலங்கை பிரஜைகளுக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், செப் 24-   மூன்று இலங்கைப் பிரஜைகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்களை போலீசார்  தேடி  வருகின்றனர்.

இங்குள்ள செந்தூல், ஜாலான் பெர்ஹெந்தியான், கோவில் ஹிலிரில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக   கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மாஜிட் கூறினார்.

செந்தூல் கோவில் ஹிலிரில் உள்ள வீட்டில் பலத்த சத்தம் கேட்டதாக அண்டை வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து  சென்று சோதனைகளை நடத்தினர்.

அப்போது அவ்வீட்டின் பொருள் வைக்கும் கிடங்கிலிருந்து  3 ஆடவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர். அச்சடலங்கள் ஒன்றின் மீது ஒன்று குவித்து வைக்கப் பட்டிருந்தன. அதில் ஒருவரின் உடல் நிர்வணமான நிலையில் இருந்தது என அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து அவ் வீட்டில் வாடகைக்கு இருந்த கணவன், மனைவியை விசாரணைக்கு உதவ போலீசார் கைது செய்துள்ளனர் எனக் கூறிய அவர், மரணமடைந்த மூன்று பேரில்  ஒருவர் இத் தம்பதியரின் 20 வயது மதிக்கத்தக்க மகனாவார் என்றார்.

அந்த வீட்டிலிருந்த ஆடவர்களிடையே கடுமையான மோதல் நடந்துள்ளது. அந்நேரத்தில் மேலும் இரு ஆடவர்களும் இருந்துள்ளனர். அவ்விருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைதான இருவரும் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இக் கொலைக்கான காரணம் இன்னும்  கண்டறியப்படவில்லை. அதற்கான விசாரணைகள் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.


Pengarang :