MEDIA STATEMENT

பாகான் லாலாங் கடற்கரையில் துப்புரவு இயக்கம்- 500 கிலோ குப்பைகள் சேகரிப்பு

சிப்பாங்  செப் 28- இம்மாதம் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலகத் துப்புரவு தினத்தை முன்னிட்டு சிப்பாங் நகராண்மைக் கழகம் 782 சிகிரெட் துண்டுகளையும் 500 கிலோ குப்பைகளையும் சேகரித்து அழித்தது.

எஸ்.டபள்யு.கோர்ப் நிறுவனத்தின் ஆதரவுடன் இங்குள்ள சுங்கை பீலேக், பாகான் லாலாங் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்புரவு இயக்கத்தில் புஸ்பானித்தா, பேங்க் இஸ்லாம், தேசிய திடக்கழிவு மேலாண்மை இலாகா, கோம்பி கேஆர்டி, பாலிடெக்னிக் பந்திங் ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் பங்கு கொண்டனர்.

திடக் கழிவுகள் மற்றும் கடலில் சேரும் கழிவுகளை அகற்றும் நோக்கில் இந்த துப்புரவு இயக்கம் மேற்கொள்ளப் பட்டதாக சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.

அளவுக்கு அதிகமான குப்பைகளும் சிகிரெட் துண்டுகளும் சமுதாயத்திற்கு பெரும் சுமையாக விளங்குகிறது. இத்தகையக் குப்பைகளை அழிப்பதற்கு தேவைப்படும் தொகை மக்களின் வரிப் பணத்திலிருந்து பயன்படுத்தப் படுகிறது என்பது பொது மக்கள் உணர வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு பல மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :