NATIONAL

அமைச்சரவை மாற்றம் நடக்கலாம்- துணைப் பிரதமர் கோடி காட்டினார்

புத்ராஜெயா, அக் 2- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான 
அரசாங்கத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று துணைப் 
பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார். 

டத்தோஸ்ரீ சலாவுடின் அயோப்பின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள  உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பதவியை நிரப்புவதும் 
அமைச்சரவை மறுசீரமைப்புக்கான  காரணமாக இருக்கலாம் என்று அவர் சொன்னார்.

அநேகமாக (மறுசீரமைப்பு) நடக்கலாம். அது விரைவில் நடக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற  புத்ராஜெயா அம்னோவின் 
சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில்  கூறினார்.

அந்த அமைச்சரவை மறு சீரமைப்பில்  உள்துறை அமைச்சர் பதவி தமக்கு 
வழங்கப்படும் என்ற ஆருடங்கள்  பற்றி கேட்டதற்கு,  தன்னிடம் ஒப்படைக்கப்படும் 
எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் பதிலளித்தார். 

நானும் அப்படி ஒரு போஸ்டரைப் பார்த்தேன், ஆனால் பிரதமர் இன்னும் என்னிடம் 
எதுவும் சொல்லவில்லை. எந்த அமைச்சிலும் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அமைச்சரவை ஒருமித்த கருத்தை எட்டுவதுதான் முக்கியம் என்றார் அவர்.

நான் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் பொறுப்பை வகித்தாலும் 
பல்வேறு அமைச்சுகளை உள்ளடக்கிய அமைச்சரவைக்  குழுக்கள் மற்றும் 
பணிக்குழுக்களுக்கு நான் தலைமை தாங்குகிறேன். தற்போதுள்ள ஒற்றுமை 
அரசாங்கத்தின் நலனுக்காக நான் அத்தகைய பொறுப்புகளை சுமக்கிறேன் என்று அவர் கூறினார்.

Pengarang :