SELANGOR

பந்திங் தொகுதி நிலையிலான மலிவு விற்பனைக்கு மகத்தான ஆதரவு- 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பந்திங், அக் 5- இங்குள்ள பந்திங் தொகுதி சட்டமன்ற சேவை மைய
வளாகத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி நிலையிலான ஏஹ்சான்
ரஹ்மா மலிவு விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு
தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.

காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இந்த
மலிவு விற்பனையில் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் அதிகளவில்
கலந்து கொண்டதாக பந்திங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கண்மணி
பெரியண்ணன் கூறினார்.

இந்த விற்பனை காலை 10.00 மணிக்கு தொடங்கிய போதிலும் பொது
மக்கள் வரிசை எண்களைப் பெறுவதற்காக காலை 7.00 மணி முதல்
வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். முதலில் வந்த 300 பேர் அரிசி,
கோழி, முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை முழுமையாக
பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்ற வேளையில் சுமார் 100 பேர் எஞ்சிய
பொருள்களை வாங்கிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக இந்த மலிவு விற்பனை
நடத்தப்படுவதால் மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்காக
சுற்று வட்டார தொகுதி மக்களும் இங்கு வருகை புரிந்தனர். சந்தையை
விட குறைவான விலையில் தரமான பொருள்களை விற்பனை செய்யும்
மாநில அரசின் இந்த திட்டத்தை இந்த விற்பனையில் கலந்து
கொண்டவர்கள் பெரிதும் பாராட்டினர் என்றார் அவர்.

இந்த திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து கிடைத்து வரும் ஏகோபித்த
ஆதரவைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 10ஆம் தேதி ஜென்ஜாரோம்
நகரிலுள்ள பந்திங் தொகுதியின் மற்றொரு சேவை மையத்தில் இந்த
விற்பனைக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு ஏற்பாடு செய்துள்ளதாக கண்மணி சொன்னார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த
மலிவு விற்பனையில் கோழி 10.00 வெள்ளிக்கும் ‘பி‘ கிரேட் முட்டை ஒரு
தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பேக் 6.00 வெள்ளிக்கும் 5
கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :