ECONOMYNATIONAL

அடுத்தாண்டில் அரசாங்கத்தின் வருமானம் 1.5 விழுக்காடு அதிகரித்து 30,760 கோடி வெள்ளியை எட்டும்

கோலாலம்பூர், அக் 13- வரும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 1.5 விழுக்காடு அதிகரித்து 30,760 கோடி வெள்ளியாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.5 விழுக்காடாக ஏற்றம் காணும் என நிதியமைச்சு கணித்துள்ளது.

வரி வசூலிப்பு அதிகரிப்பின் வாயிலாக இந்த வருமான உயர்வு சாத்தியமாகும் என 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வருவாய் மதிப்பீட்டு அறிக்கை கூறியது.

வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் கடந்தாண்டை விட 6.4 விழுக்காடு அதிகரித்து 24,360 கோடி வெள்ளியாக உயர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் மொத்த வருமானத்தில் 79.2 விழுக்காடாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.3 விழுக்காடாகவும் இருக்கும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கூடுதல் வரி வசூலிப்பு க்கு பொருளாதார வளர்ச்சி பெரிதும் துணை புரியும். வரித் தள விரிவாக்கம், வரி வசூலிப்பு முறையில் மேம்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவையும் வருமான அதிகரிப்பை ஊக்குவிக்கும் என்று அது தெரிவித்தது.

நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் பட்டியலிடப்படாத பங்குகளுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பு மற்றும் இ-இன்வோய்சிங் போன்ற நடைமுறைகள் அமலாக்கமும்  வருமான அதிகரிப்புக்கு உதவும் என நிதியமைச்சு கூறியது.


Pengarang :