MEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் முயற்சியில் செக்சன் 2 மறுசுழற்சி மையம் தரம் உயர்த்தப்பட்டது

ஷா ஆலம், அக் 20– மக்களுக்கு நட்புறவானதாகவும் மறுசுழற்சியை தங்களின் வாழ்வியல் அங்கமாக சமூக ஏற்றுக்கொள்வதற்குரிய ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் இங்குள்ள செக்சன் 2 மறுசுழற்சி மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

டெட்ராபெக் மலேசியா மற்றும் என்தோமல் பயோடெக் சென். பெர்ஹாட் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மறுசுழற்சி மையத்தை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட் கூறினார்.

மறுசுழற்சி மையம் தவிர்த்து இங்கு மினி நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அறிவை வளர்க்கக்கூடிய மற்றும் புத்தகங்களை பரிமாறிக்கொள்ளக் கூடிய மையமாக இந்த இடத்தை மாற்றுவதே எங்களின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, இந்த மறுசுழற்சி மையத்தின் ஒரு பகுதியை உணவுக் கழிவுகளை சேகரித்து ‘கருப்பு இராணுவ ஈ‘ எனப்படும் முறையில் இயற்கை உரமாக மாற்றக்கூடிய மையமாகவும் மாநகர் மன்றம்  மாற்றியுள்ளது என அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் வாயிலாக மாதம் ஒன்றுக்கு ஒரு டன் உணவுக் கழிவு பொருள்களை சேகரிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த மறுசுழற்சி மையத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த மையத்தில்  பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிக்கும் சேவையையும் வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், பொது மக்கள் வழங்கும் மறுசுழற்சி பொருள்களுக்கு ஈடாக பற்றுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தையும் விரைவில் அமல்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்


Pengarang :