ECONOMYSELANGOR

சிலாங்கூர் கண்காட்சியின் வழி பாரம்பரிய, நவீன மருந்துகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வாய்ப்பு

கோலாலம்பூர், அக் 22- செம்பனை இலையின் மூலம் மூலிகைத் தேயிலை தயாரிக்கும் நிறுவனம் தங்களின் தயாரிப்பின் மகத்துவத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு சிலாங்கூர் அனைத்துலகக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

சந்தையில் வழக்கமாக காணப்படும் தேயிலை மற்றும் பச்சைத் தேயிலையைக் காட்டிலும் வேறுபட்ட ஊட்டச்சத்தை கொண்டுள்ள ஃபிலியோ எனப்படும் தங்கள் தயாரிப்பு பொருளுக்கு ஆதரவு பெருகி வருவதாக டி.ஆர்.பி. டெக்னோலோஜிஸ் (ம) சென். பெர்ஹாட் நிறுவனத்தின் திட்ட நிர்வாகி ஏ.ஆர். திருச்செல்வம் கூறினார்.

இந்த தேயிலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் முடக்குவாதம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு நிவாரணியாக விளங்குவதால் இந்த மூலிகை தேயிலைக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என்று அவர் சொன்னார்.

முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த தேயிலையை நாங்கள் பரீட்சித்து பார்க்கையில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு இந்த பானத்தை அருந்தியவர்கள் அந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த தேயிலை மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பைப் பெறும் எனத் தாங்கள் நம்புவதோடு மருந்தகங்களிலும் இதனை விற்பனைக்கு வைக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக கண்காட்சியில் தாங்கள் இரண்டாம் முறையாகப் பங்கேற்றுள்ளதாக மைமெடிக்கல் ஹெல்த்கேர் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாகி ரோஸ்சலிஸா முகமது சானி கூறினார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று  வரை நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த கண்காட்சியில் சீனா, இந்தோனேசியா, கொரியா, உகாண்டா, துருக்கி, கென்யா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.


Pengarang :