ECONOMYNATIONALPENDIDIKAN

திவேட் திட்டத்தில்  940 இந்திய மாணவர்களுக்கு பயிற்சியளிக்க  மித்ரா  வெ.1.14 கோடி ஒதுக்கீடு

சுபாங், நவ 3– தொழில் நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில்  (திவேட்) பங்கேற்றுள்ள 940 இந்திய மாணவர்களுக்காக மித்ரா எனப்படும் இந்திய சமூக உறுமாற்றுப் பிரிவு 1 கோடியே  14 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

வாகன பராமரிப்பு, பற்றவைப்பு, கணினி, சரக்கு  போக்குவரத்து, உணவு, பானத் தயாரிப்பு, ட்ரோன் கையாளுதல் மற்றும் சுற்றுலாத் துறையில் அவர்கள் பயிற்சி பெற்று வருவதாக மித்ரா நடவடிக்கை குழுத் தலைவர் டத்தோ ரமணன் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்காக பிரதமர் மித்ராவின் கீழ் 10 கோடி வெள்ளியை  ஒதுக்கினார். இந்த நிதியை கொண்டு மித்ரா பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக திவேட் எனப்படும் தொழில் திறன் மேம்பாட்டு கல்விக்காக மித்ரா 11.46 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது. 1000 பேர் பயன் பெறும் வகையில் இந்நிதி ஒதுக்கப்பட்டது.

இதில் மின்சார வாகன பாராமரிப்பு பயிற்சிக்காக 2.875 மில்லியன் ரிங்கிட்டை மித்ரா ஒதுக்கியது.ஒரு மாணவருக்கு 11,500 ரிங்கிட் என 250 மாணவர்கள் இப்பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அம்மாணவர்கள் பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

இதில் சுபாங்ஜெயாவில் எஸ்ஜி அகாடமி அதிநவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு இப்பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இவ்வேளையில் எஸ்ஜி கல்வி குழுமத்தின் தலைமை இயக்குநர் ஸ்ரீ கணேஸ் உட்பட அவர்தான் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சார வாகனம் என்பது நமது எதிர்காலமாக உள்ளது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அந்த தொழில்நுட்பத்தில் நாம் கால் பதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த தொழில் துறையை பயின்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் முறையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.


Pengarang :