ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சந்தையில் வெங்காய விநியோகம் போதுமான அளவு உள்ளது

கோலாலம்பூர், நவ 10-  உள்நாட்டு சந்தையில் வெங்காய விநியோகம் தற்போது போதுமான அளவு உள்ளதோடு கையிருப்பும் தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்கிறது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் பவுஸியா சாலே தெரிவித்தார்.

வெங்காயத்தின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் இந்தியாவின் நடவடிக்கையினால் உள்நாட்டு விநியோகம் இன்னும் பாதிக்கப்படவில்லை என்றாலும் இதர நாடுகளில் இருந்து வெங்காய விநியோகத்தைப் பெற அரசாங்கம் முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. (வெங்காய விநியோகம்) ஏனென்றால், எங்களிடம் இன்னும் பழைய கையிருப்பு உள்ளது.  மேலும் இந்தியாவைத் தவிர பிற உற்பத்தி  நாடுகளிலிருந்தும் அந்த உணவுப் பொருளைத் தேடுகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள லூலு பேரங்காடியில் தீபாவளி விலை உச்சவரம்பு திட்ட அமலாக்கத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

தற்போது வெங்காய கையிருப்பு நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், இருப்பைக் கட்டுப்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தொழில் துறையினர் கருத்து  தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

அக்டோபர் 29 முதல் இந்த ஆண்டு இறுதி வரை  டன் ஒன்றுக்கு 800 அமெரிக்க டாலர்கள் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை விதிப்பதன் மூலம்  வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த  இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து கருத்துரைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.

2023ஆம் ஆண்டில் வெங்காய விளைச்சல்  குறைந்து வருவதைத் தொடர்ந்து உள்நாட்டு பயனீட்டாளர்களுக்கு  நியாயமான விலையில் வெங்காயம்  வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்திய பயனீட்டாளர் விவகார அமைச்சு முன்பு தெரிவித்தது.


Pengarang :