ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செம்பனை எண்ணெய் இறக்குமதியை சீனா அடுத்தாண்டு அதிகரிக்கும்

பெய்ஜிங், நவ. 19 – சீனாவுக்கான துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப்பின் பணி நிமித்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதோடு பல்வேறு துறைகளில் குறிப்பாக, விவசாயம் மற்றும் செம்பனை மூலப் பொருள் துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புக்கும் வழி வகுத்துள்ளது.

சுமார் 140  கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாடு  31 லட்சத்து 40 ஆயிரம்  டன்னாக உள்ள செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை அடுத்தாண்டில் 34 லட்சம் டன்னாக  உயர்த்த உறுதியளித்துள்ளதாக  தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் துறை  அமைச்சருமான ஃபாடில்லா தெரிவித்தார்.

கடந்த 14 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா இருந்து வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மலேசியாவின் விவசாயப் பொருள் ஏற்றுமதியின் மதிப்பில் 2,646 கோடி டாலர் அல்லது 12.8 விழுக்காட்டு பங்களிப்பை சீனா வழங்கியது. கடந்த   2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 11 விழுக்காடு மட்டுமே இருந்தது.

2022 ஆம் ஆண்டில் சீனாவிற்கு செம்பனை எண்ணெய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு 1,641  கோடி வெள்ளியாகவும்  அதே ஆண்டில் சீனாவிற்கு மலேசியாவின் செம்பனை எண்ணெயின் ஏற்றுமதி மதிப்பு 844 கோடி டாலராகவும் இருந்தது.

இது ஒரு வெற்றிகரமான பணி நிமித்தப் பயணமாகும். நாங்கள் மிகவும் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலைக்  கொண்டிருந்தாலும் விவாதங்கள் அனைத்தும்   அர்த்தமுள்ளதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தன.  அவர்களின் பதில்கள்  நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையானதாக இருப்பதைக் கண்டு பிரமித்துப் போனோம் என்று ஃபாடில்லா சொன்னார்.

நாங்கள்  முன்வைத்த அனைத்தையும் அவர்கள்  வரவேற்றதோடு எங்கள் நாட்டுடனான வர்த்தகத்தை அதிகரிக்கவும் உறுதிபூண்டுள்ளனர் என்று அவர் சீனாவுக்கான தனது பயணத்தின்  முடிவில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது அவர் தெரிவித்தார்.

கடந்த  நவம்பர் 12ஆம்  சீனாவுக்கான  தனது பயணத்தைத் ஃபாடில்லா தொடங்கினார். ஷாங்காய்க்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்ட அவர், நான்கு நாட்கள் பெய்ஜிங்கில் இருந்தார்.


Pengarang :