ANTARABANGSAMEDIA STATEMENT

போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து 63 பாலஸ்தீன-இஸ்ரேலிய கைதிகள்  விடுவிப்பு

ஜெருசலம் நவ 25- பாலஸ்தீன பேரின் போது பிடிபட்ட இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் ஹமாஸ் போராளிகளை உள்ளடக்கிய 63 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

கட்டார் ஏற்பாட்டிலான இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து  24 பேரை ஹமாஸ் போராளிகளும் 39 பாஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்ததாக கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் 13 இஸ்ரேலியர்கள், பத்து தாய்லாந்து பிரஜைகள் மற்றும் ஒரு பிலிப்பினோ ஆகியோரும் அடங்குவர் என்று மஜித் அல்-அன்சாரி என்ற அந்த பேச்சாளரை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தைக் கடைபிடிப்பது மற்றும் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் மேற்கொண்ட இஸ்ரேல் மீதான தாக்குதலில் பிணையாக பிடிக்கப்பட்ட 24 பேரையும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனர்களையும் விடுவிப்பது உள்ளிட்ட விஷயங்களில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 39 பெண்கள் மற்றும் சிறார்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் மஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.

இதனிடையே, பாலஸ்தீன பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு ராஃபா எல்லைக்கு கொண்டுச் செல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேலில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கச் செயற்குழு கூறியது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிணையாக பிடிக்கப்பட்ட 240 இஸ்ரேலியர்களில் 50 பெண்கள் மற்றும் சிறார்களை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது.


Pengarang :