ECONOMYNATIONAL

அன்வார் தலைமையிலான மத்திய அரசாங்கம் வலுவாக உள்ளது- ரபிஸி கூறுகிறார்

புத்ராஜெயா, நவ 25- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தற்போது மிகவும் நிலைத்தன்மையுடன் உள்ளதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.

பிரதமருக்கான மக்களின் ஆதரவு சரிந்து வருகிறது என்ற மெர்டேக்கா சென்டரின் கருத்துக் கணிப்பை நிராகரித்த அவர், பிரதமர் தலைமையிலான கட்சித் தலைமைத்துவமும் மக்கள் ஆதரவும் அரசாங்கம் வலுவுடன் இருப்பதற்கான காரணங்களாக விளங்குகின்றன என்றார்.

கெஅடிலான் கட்சியின் கண்ணோட்டத்தின் படி அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் மிகவும் வலுவாக உள்ளது. உட்கட்சி அரசியலில் காணப்படும் நிலைத்தன்மை இதற்கு காரணமாகும். அனைத்து அம்சங்களையும் முன்னோக்கிப் பார்க்கையில் ஒற்றுமை அரசு திடமாக உள்ளதையும் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதையும் காண முடியும என்றார் அவர்.

இங்குள்ள புத்ராஜெயா மாநாட்டு மையத்தில் கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு கூட்டங்களைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத் தலைவருக்கான ஆதரவு அவர் பதவியேற்றவுடன் அதிகரித்து பதவி காலத்தின் மத்திய தவணையில் சற்று குறைவது உலகம் முழுவதும் நிகழக்கூடிய வழக்கமான ஒரு நிகழ்வாகும் என்று அவர் சொன்னார்.

புதிதாக பதவியேற்ற அரசாங்கம் மத்திய தவணையின் போது பிரபலத்தை சற்று இழப்பது வழக்கமான ஒன்று என்பது மலேசியா மட்டுமின்றி உலக அரசியலையும் நன்கு அறிந்தவர்களுக்கு தெளிவாத் தெரியும் என்றார் அவர்.


Pengarang :