ECONOMYMEDIA STATEMENT

இவ்வாண்டில் கடலில் காணாமல் போன 1,365 பேரை ஏ.பி.எம்.எம். மீட்டுள்ளது

சிரம்பான், டிச 3- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை கடலில் காணாமல் போனவர்களைத் தேடி மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட 1,487 நடவடிக்கைகளில் 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் காப்பாற்றியுள்ளது.

கடல் மாசுபாட்டைத் தடுப்பதில் கடல்சார் அமலாக்க நிறுவனம் காட்டி வரும் தீவிர அக்கறையை இந்த நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று மலேசிய கடல் சார் தலைமை இயக்குநர் லக்ஸ்மணா மெரிடைம் டத்தோ ஹமிட் முகமது அமின் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் 154,463 சோதனை மற்றும் தேடல் நடவடிக்கைகளை இந்த அமலாக்க நிறுவனம் மேற்கொண்டுள்ளதோடு பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 1,114 பேரையும் கைது செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தேசிய கடல் தேடுதல் மற்றும் மீட்பு  பணிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பாக விளங்கும் ஏ.பி.எம்.எம்., கடலில் சிக்கிக் கொண்டவர்களையும் அவர்களின் சாதனங்களையும் விரைந்து மீட்பதற்கு ஏதுவாக எந்நேரமும் முழு தயார் நிலையில் இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்ய மாசுபாட்டிலிருந்து கடல் பகுதி விடுபட்டிருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் இந்த அமைப்பு முழுமையாக ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

நாட்டின் கடல் பகுதியை பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள ஏ.பி.எம்.எம்.மின் பணிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் ஊடகங்கள் ஆற்றி வரும் பங்கை தாம் பெரிதும் போற்றுவதாக அவர் சொன்னார்.

தாங்கள் மேற்கொண்டு வரும் அமலாக்க மற்றும் தேடி மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் மக்களிடம் விரைவாகவும் சரியாகவும் சென்று சேர்வதை உறுதி செய்வதில் ஊடங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். 


Pengarang :