ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முறையான சிகிச்சையின்றி நோயாளி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு- வெளிபடையான விசாரணை நடத்தப்படும்

அலோர் ஸ்டார், டிச 9- சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கப்படாத காரணத்தினால் நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சு  விசாரணை நடத்தும்.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தாங்கள்  விசாரணையைத் தொடக்கி விட்டதாகவும் எந்தவொரு புகார் மீதும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கேற்ப முறையாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் அவர் உயிரிழக்க நேரிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

இந்த விவகாரத்தை தாங்கள் கடுமையாகக் கருதுவதோடு அந்த குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும். இரகசியத்தை பாதுகாக்கும் நடவடிக்கையின் படி அந்த விசாரணையின் முடிவுகள் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரிடம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்று அது தெரிவித்தது.

மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட நோயாளிக்க்கு  சிகிச்சை அளிக்கும் போது அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டத் தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நெஞ்சு வலிக்கு சிகிச்சைப் பெறச் சென்றவருக்கு கேஸ்ட்ரிக் மருந்து கொடுக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்தில் நோயாளி உயிரிழந்தார்“ என்ற தலைப்பிலான செய்தி சமூக ஊடங்களில் அண்மைய சில தினங்களாக பகிரப்பட்டு வருகிறது.


Pengarang :