SELANGOR

ஹைலண்ட் டவர் சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க 356 மலைச்சாரல்கள் மீது எம்.பி.ஏ.ஜே. தீவிர கண்காணிப்பு

ஷா ஆலம், டிச 12-  ஹைலண்ட் டவர்ஸ் பேரிடர் போன்ற சம்பவம்  மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனது நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து 356 மலைச் சாரல்களையும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்.பி.ஏ.ஜே.) அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

இந்த ஆண்டு அதிக மற்றும் மிதமான   ஆபத்து கொண்ட 61 மலைச் சரிவுகளை நிர்வகிப்பதற்கான  ஆரம்பப் பணிகளைத் தாங்கள்  மேற்கொண்டு வருவதாகச் சிலாங்கூர்கினிக்கு அனுப்பிய அறிக்கையில் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

மலைச் சாரல்களில் அதிக பளு ஏற்பட்டு, அதனால் நீரோட்டம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அப்பகுதிகளில் துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்று அது குறிப்பிட்டது.

மலைச் சாரல்களில் நீர் உறிஞ்சப்பட்டு அதனால் மலைச்சாரல் மண் பலவீனமடைவதைத் தடுக்க அப்பகுதியில் உள்ள வடிகால்களைச் சீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்ந அறிக்கை கூறியது.

மண் நகர்வைக் கண்டறிவதற்காக ஆபத்து மிகுந்த சில மலைச் சரிவுகளில் முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம் அப்பகுதிகளில் மலைச்சாரல்களை வலுப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மலைச் சாரல்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் தலையாயப் பணியாக உள்ளது. மலைச் சாரல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய  செய்ய அது தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

உலு கிளாங்,  தாமான் ஹில்வியூவில் உள்ள ஹைலண்ட் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து  இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.

நாட்டின் வரலாற்றில் மிக மோசமான இச்சம்பவத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மூசா ஹித்தாமின் மகன் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 48 பேர் உயிரிழந்தனர்


Pengarang :