ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

வீடுகளை காலி செய்ய பூச்சோங், தாமான் வாவாசானில் உள்ள  29 குடியிருப்பாளர்களுக்கு உத்தரவு

பூச்சோங், டிச.17-  பூச்சோங், தாமான் வாவாசனில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி  குடியிருப்புகளை காலி செய்யுமாறு  ஒன்பது வீடுகளைச் சேர்ந்த  மொத்தம் 29 பேர் பணிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இங்குள்ள லாமான் புத்ரி 3 பல்நோக்கு மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம் பெற உத்தரவிடப்பட்டதாக  செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன்  கூறினார்.

எனினும் அவர்களில் எட்டு பேர் மட்டுமே அவ்வாறு செய்ததாகவும் மற்றவர்கள் தங்கள் உறவினர் வீடுகளில் அடைக்கலம் நாடியுள்ளதாகவும்   அவர் தெரிவித்தார்.

அப்பகுதியில் மண் நகர்வு இருப்பது சம்பந்தப்பட்ட  நிறுவனங்களின் அறிக்கைகள் வழி கண்டறியப்பட்டால்  அங்கிருந்து மேலும் அதிகமான குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கான சாத்தியத்தை தாங்கள்  நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இதுவரை எனக்கு கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில்,  அங்கு மண் நகர்வு எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் ஆயர்  சிலாங்கூர் நிறுவனம்  இந்த பகுதியில் உள்ள நீர்க் குழாய்களை மூடியுள்ளது. ஏனெனில்  குழாயிலிருந்து கசியும் நீர் புதிதாக மண் நகர்வை  ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறோம் என்று  சம்பவ இடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு 7.30 மணியளவில் ஜாலான் வாவாசன் 3/9 மற்றும் 3/14 ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு வாகனங்கள் புதையுண்டன. ஆனால் இச்சம்பவத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அன்பழகன் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் கூடாதவாறு பார்த்துக் கொள்வதோடு, வீடுகளை விட்டு வெளியேறியவர்களின் சொத்துகளைப் பாதுகாப்பதற்காக காவல்துறையைத் தவிர, சுபாங் ஜெயா மாநகர் மன்ற  பொறியியல் பிரிவு, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பொது தற்காப்பு உள்ளிட்ட பிற நிறுவனங்களும் அங்கு  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :