ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

மழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கட்டுமானத் துறையினருக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், டிச 17-  தற்போதைய  மழைக்காலத்தில் கட்டுமானத் தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து திட்ட உரிமையாளர்கள் மற்றும் குத்தகையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சி.ஐ.டி.பி.) வலியுறுத்தியுள்ளது.

இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை போன்றவை  கட்டுமானத் தளங்களில் பாதுகாப்புக்கு அதிக ஆபத்தையும் இயந்திரங்களுக்கு பெரும் சேதத்தையும் விளைவிக்கும் என்று சி.ஐ.டி.பி. தலைமை நிர்வாகி டத்தோ முகமது ஜைட் ஜக்காரியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

கடந்த செவ்வாய்கிழமை கிரேன் தணடவாளத்தில்  விழுந்து பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டச் சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர்,    அன்றைய தினம் மதியம் 2.00 மணி முதல் தொடர்ந்து பெய்த மழையால்  தண்ணீர் தேங்கி தரையின் வலிமை குறைந்து கிரேன் விழுந்தது  முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என அவர் சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை அந்த கட்டுமான தளத்தில் பணியை நிறுத்த சி.ஐ.டி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டுமானப் பணி திட்டமிடலில்  வானிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக,  இயந்திரங்கள் சம்பந்தப்படுத்தப்பட்ட   அதிக ஆபத்துள்ள பணிகள் மழைக் காலத்திற்கு முன்பே மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

கடந்த செவ்வாய்கிழமை தண்டவாளத்தின் மீது கிரேன் விழுந்ததால் கே.டி.எம்.பி.  மற்றும் இ.டி.எஸ். இரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்துப் பகுதிகளுக்கு அருகில் பேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானப் பணியும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முகமது ஜைட் ஜக்காரியா நினைவுறுத்தினார்.


Pengarang :