ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தைத் தடுக்க வடிகால் துப்புரவு உள்ளிட்ட பணிகளில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தீவிரம்

சுபாங் ஜெயா, டிச 23- வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்து உள்பட பல்வேறு ஆக்ககரமான நடவடிக்கைகளை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் எடுத்து வருகிறது.

இப்பகுதியில் நடப்பு நிலவரங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு மாநகர் மன்றத்தின் பொறியியல் துறை மற்றும் சுற்றுச் சூழல் மேலாண்மைத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

வடிகால்கள் அடைப்பு ஏதுமின்றி சுத்தமாகவும் சீரான நீரோட்டத்திற்கு ஏற்ற வகையிலும் இருப்பதை இவ்விரு துறைகளும் உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

கால்வாய்கள் குப்பைகளால் அடைபடாமலிருப்பதையும் குப்பைத் தடுப்பு சாதனங்கள் முறையாகச் செயல்படுவதையும்  சுற்றுச்சூழல் மேலாண்மை துறை உறுதி செய்யும். வடிகால்களில் குப்பைகள் காணப்படும் பட்சத்தில் அவற்றை அகற்றும் பணியில் அத்துறை ஈடுபடும் என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட பகுதிகளை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்பதோடு ஒவ்வொரு வாரமும் இதன் தொடர்பான அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் வடிகால் முறை சிறப்பாகவும் குப்பைகள் இன்றியும் இருப்பதை நாம் உறுதி செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே, வரும் 2030ஆம் ஆண்டிற்குள் குறைந்த கார்பன் வெளியேற்ற மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கும் நோக்கத்திற்கேற்ப  அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மரம் நடும் இயக்கத்தை  சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தொடக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :