MEDIA STATEMENTNATIONAL

பிரதமரின் சர்ச்சைக்குரிய அந்த வார்த்தையை அரசியலாக்க வேண்டாம்- டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்து

ஷா ஆலம், டிச 25- இந்தியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய ‘கிளிங்‘ என்ற வார்த்தையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தவறுதலாக உச்சரித்து, அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்ட நிலையில்  அவ்விவகாரத்தை இனியும் அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையாண்டு வரும் சில தரப்பினர் அன்வாரை தீவிரவாதப் போக்குடைய பிரதமராக சித்தரிக்க முயன்று வருவதாக பி.கே.ஆர். கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான அவர் சொன்னார்.

அனுபவம் வாய்ந்த மற்றும் மக்களால் பெரிதும் மதித்க்கப்படும் தலைவரான அன்வார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 20 ஆண்டுகாலத்தில் எந்த சூழ்நிலையிலும் எந்த இனத்தையும் புண்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சர்ச்சைக்குரிய இந்த வார்த்தையைக்கூட அவர் ஹாங் துவா வரலாற்றை விவரிக்கும் போதுதான் குறிப்பிட்டுள்ளார். இந்திய சமுதாயத்தை சிறுமைப்படுத்துவதோ அவமதிப்பதோ அவரின் நோக்கமாக இருந்ததில்லை என்று சத்திய பிரகாஷ் குறிப்பிட்டார்.

ஆகவே, நெறிகளுக்கு புறம்பான முறையில் இந்த விவகாரத்தை பூதாகரமாக்க முயலும் தரப்பினர் தங்களின் நடவடிக்கைளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலு சிலாங்கூர்  நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான அவர் தெரிவித்தார்.

அந்த வார்த்தை மிகவும் உணர்ச்சிகரமான என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். ஆயினும், நாம் அனைவரும் குறைகளே இல்லாத முழுமையான மனிதர்கள் கிடையாது. சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்ததை உணர்ந்தவுடன் அதற்காக வெளிப்படையாகவும் உளப்பூர்வமாகவும் அவர் மன்னிப்பு கோரி விட்டார். ஆகவே மனிதாபிமான அடிப்படையில் அந்த மன்னிப்பை பெருமனதுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் சத்திய பிரகாஷ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :