MEDIA STATEMENTYB ACTIVITIES

புக்கிட் கெமுனிங் 5வது மைல் பகுதியில் தூய்மைக்கேட்டுப் பிரச்சனை-சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் நேரில் ஆய்வு

ஷா ஆலம், டிச 26- இங்குள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங் 5வது மைலில்  குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதி மற்றும் தூய்மைக் கேட்டுப் பிரச்சனைகளை நேரில் கண்டறிவதற்காக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் அப்பகுதிக்கு வருகை புரிந்தார்.

அப்பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாதது,  புதர்கள் மண்டிக் கிடப்பது, நீரோட்டம் இல்லாத காரணத்தால் கொசுக்கள் பெருகி டிங்கி போன்ற நோய்கள் ஏற்படுவது குறித்து வட்டார மக்கள் அளித்த புகாரின் பேரில் அவர் இந்த வருகையை மேற்கொண்டார்.

குப்பைகள் அகற்றப்படாமலும் புதர்கள் துப்புரவு செய்யப்படாமலும் இருக்கும் காரணத்தால் பாம்பு, உடும்பு போன்ற ஜந்துகள் வீடுகளுக்கு படையெடுப்பதாக குடியிருப்பாளர்கள் பிரகாஷிடம் முறையிட்டனர்.

குடியிருப்புகளுக்கு அருகில் தளவாடப் பொருள் தொழிற்சாலை இயங்குவதையும் செம்பனைத் தோட்ட முதலாளி வடிகால்களில் ஏற்படுத்திய தடுப்பு காரணமாக மழை நீர் ஆற்றுக்குச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதையும் இந்த வருகையின் போது தாம் நேரில் கண்டறிந்ததாக பிரகாஷ் சொன்னார்.

இந்த தூய்மைக்கேட்டுப் பிரச்சனையை தாம் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர், வட்டார மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அரசு துறைகளுடன் இணைந்து இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாக  தெரிவித்தார்.

இது போன்ற தூய்மைக்கேட்டுப் பிரச்சனைகளால் நோய்கள் பரவி பொது மக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கோத்தா கெமுனிங் தொகுதி மட்டுமின்றி இதரப் பகுதிகளிலும் இது போன்ற பிரச்சனைகள் எழாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

இந்த கள ஆய்வில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான ராமு நடராஜான், ஷாக்கிர், கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Pengarang :