BudgetMEDIA STATEMENTNATIONAL

40 வயதுக்கும் கீழ் பட்டவர்கள் மத்தியில் மாரடைப்பு, பக்கவாதம் தொடர்பான மரணங்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜன 6- நாட்டில் 40 வயதுக்கும் கீழ் பட்டவர்கள் மத்தியில் திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் காரணமாக நடுத்தர வயதினர் மத்தியில் இத்தகைய திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டதால் நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்து திடீரென பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிக்கும் காரணத்தால் இருதய இரத்த நாள அமைப்பில் அதிர்ச்சி ஏற்படுவது இத்தகைய மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஹார்ட் பிட் இ-இசிபி நல்வாழ்வு மையத்தின் நிறுவனர் டாக்டர்  எஸ். டினேஷ் கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் நமது சமுதாயத்தில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் நம்மில் பலர் மிகவும் தீவிரமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டதன் காரணமாக சம்பந்தப்பட்டத் தரப்பினர் மத்தியில் திடீர் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கின என்றார் அவர்.

நீண்ட நாட்களாக உற்பயிற்சி செய்யாமலிருந்து திடீரென பயிற்சிகளில் தீவிரம் காட்டும் போது நமது உடல் திடீர் அதிர்ச்சியை எதிர்கொள்ளும் என்று பெர்னாமா டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

உயர் இரத்த அழுத்தம், போதுமான அளவு உறக்கமின்மை, இருதய நோய் பின்னணி போன்றவையும் இத்தகைய திடீர் மரணங்களுக்கு காரணமாக உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

மாரடைப்பு திடீர் மரணங்கள் திடீரென சம்பவிக்கும் என்பதால் அதற்கான அறிகுறிகளை கண்டறிவது கடினமாகும். வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாறுதல்களைச் செய்வதன் மூலம் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம் என அவர் தெரிவித்தார்.


Pengarang :