MEDIA STATEMENTNATIONAL

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு இலவச கே.டி.எம். பயணிகள் ரயில்  சேவை

கோலாலம்பூர், ஜன 14 – இம்மாதம்   24ஆம் தேதி மற்றும் 25ஆம்தேதி   கொண்டாடப்படும் பத்துமலை  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான   பக்தர்களின் வசதிக்காக கே.டி.எம். பயணிகள் ரயில் கூடுதல் சேவையை இலவசமாக வழங்கவிருப்பதாக  போக்குவரத்து அமைச்சர்  அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் கே.டி.எம் மின்சார ரயில் சேவை    4 நாள்  முன்று இரவு  என   24 மணிநேரம்   சேவையை வழங்கவிருக்கிறது.   ஜனவரி 23ஆம்  தேதி  தொடங்கி  ஜனவரி 26 ஆம் தேதிவரை   24 மணி நேரம் பத்துமலைக்கான  கே.டி எம். பயணிகள்  ரயில்  சேவை இருக்கும் என அவர் சொன்னார்.

மேலும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பத்துமலைக்கு செல்லும்  லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வசதியாக  இலவச   கே.டி.எம்   பயணிகள் ரயில் சேவை   ஜனவரி 24ஆம் தேதி முதல் ஜனவரி 25தேதிவரையும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   அதே போன்று  பட்டர்வெர்த் – கோலாலம்பூர் சென்டரல்   மற்றும் பாடாங் பெசார் –  கோலாலம்பூர் சென்ட்ரலுக்கான  கூடுதல்  இ.டி.எஸ். கூடுதல் ரயில் சேவையும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பத்துமலையில் தைப்பூச கொண்டாட்டத்திற்காக முன்னேற்பாடு நவடிக்கைகளை கண்காணிக்கும்  வகையியில்  முதல் முறையாக பத்துமலை திருத்ததலத்திற்கு  வருகை புரிந்து பின் செய்தியாளர்களிடம் பேசியபோது   அவர்  இத்தகவலை வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக  பத்துமலை திருத்தலத்தில்  தேவஸ்தான  தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தலைமையில்  பத்துமலையில் அந்தோணி லோகிற்கு சிறப்பு  செய்யப்பட்டது.   நாட்டில் தைப்பூசம் கொண்டாடப்படும் முன்னணி திருத்தலங்களுக்கு  செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக  பொதுபோக்குவரத்து வசதியை  போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக   அமைச்சர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவில் இவ்வாண்டும் அதிகமான  பக்தர்கள் மட்டுமின்றி   சுற்றுப்பயணிகளும் நாடு  முழுவதிலும் பத்துமலை திருத்தலத்திற்கு  வருகை புரிவார்கள்  என்பதால்   ரேப்பிட் கே.எல்  நிறுவனத்தின் ஏற்பாட்டில் மூலம் பத்துமலை மற்றும் பினாங்கிலும் கூடுதல் இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :