NATIONAL

கடந்தாண்டு டிங்கிக்கு எதிரான நடவடிக்கையில் வெ.1.8 கோடி மதிப்புள்ள குற்றப்பதிவுகள் வெளியீடு

கோலாலம்பூர், ஜன 17- டிங்கிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மற்றும்
தடுக்கும் நடவடிக்கையாக 1975ஆம் ஆண்டு நோய் பரப்பும் பூச்சிகள்
அழிப்புச் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு 1 கோடியே 80 லட்சம் வெள்ளி
மதிப்புள்ள 36,426 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

அதே காலக்கட்டத்தில் 4,264 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட
நிலையில் 911 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 23 லட்சத்து 49
ஆயிரத்து 950 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்று சுகாதாரத் துறை
தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான்
கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 12 லட்சம் வெள்ளி அபராதத்
தொகையை உள்ளடக்கிய 2,470 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
ஒவ்வொரு குற்றத்திற்கு சராசரி அபராதத் தொகை 500 வெள்ளியாகும்.

இவற்றில் 426 வழக்குகள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட
வேளையில் 48 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 188,550 வெள்ளி
அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இதனிடையே, 2004ஆம் ஆண்டு புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்
கீழ் கடந்தாண்டு முழுவதும் 246,982 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் 112,455 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அவற்றில் 63,039 குற்ற அறிக்கைகளுக்கு 1 கோடியே 60 லட்சம் வெள்ளி
அபராதமாக வசூலிக்கப்பட்டது என்றார் அவர்.

மேலும் 1983ஆம் ஆண்டு உணவுச் சட்ட அமலாக்க நடவடிக்கையின் கீழ்
கடந்தாண்டு 104,925 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 2,242
வணிக மையங்களை தற்காலிக மூட உத்தரவிடப்பட்டது என்றும் அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :