ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்கு வெ.20,000 மானியம்- பாப்பாராய்டு வழங்கினார்

ஷா ஆலம், ஜன 26- சிலாங்கூர் மாநிலத்தில் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆலயங்களில் பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்திற்கு அடுத்து கோல சிலாங்கூர், இரண்டாவது மைல், ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் விளங்குகிறது.
இவ்வாலயத்தில் நேற்று நடைபெற்ற தைப்பூச விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு  துணைவியாருடன்   இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பாப்பாராய்டுவுக்கு ஆலயத் தலைவர் கண்ணதாசன் பரமசிவம் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்த நிகழ்வின் போது சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் 20,000 வெள்ளி மானியத்தை பாப்பாராய்டு ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.  தைப்பூச விழாவை முன்னிட்டு கோல சிலாங்கூர் சுங்கை திங்கி தோட்ட ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்திலும் நடைபெற்ற திருவிழாவில் பாப்பாராய்டு தம்பதியர் கலந்து கொண்டனர்.

ஆலய ஒருங்கிணைப்பாளர்  அகிலன் தலைமையிலான குழுவினர் பாப்பாராய்டு தம்பதியருக்கு பூரண மரியாதையுடன் வரவேற்பு நல்கினர். இந்த நிகழ்வின் போது, வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்கள் ஆட்சிக்குழு உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர்.

முன்னதாக, கோல சிலாங்கூர் புக்கிட் பெலிம்பிங் தோட்ட  ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவிலும் பாப்பாராய்டு தம்பதியர் கலந்து கொண்டனர்.


Pengarang :