ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மோட்டார் சைக்கிள் கடையில் தீவிபத்து- மாற்றுத் திறனாளி கருகி மரணம்

சுங்கை பட்டாணி, ஜன 28-  இங்குள்ள  குருண், தாமான் ஸ்ரீ உத்தாமாவில் உள்ள மோட்டார் சைக்கிள் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர்  உயிரிழந்தார்.

முப்பத்து நான்கு  வயதான அந்த நபர் அக்கடையின்  கழிவறையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டதாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர்  வான் முகமது ஹமிஸி வான் முகமது ஜின் கூறினார்.

அதிகாலை 4.40 மணிக்கு 999  தொலைபேசி இணைப்பின் வாயிலாக தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்தது.  குவார் செம்பாடாக் மற்றும் யான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து  மொத்தம் 16 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த மோட்டார் சைக்கிள் கடையின் உரிமையாளரின் மகனான அந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்துவிட்டதை  சுகாதார அமைச்சின் அதிகாரி உறுதிப்படுத்திறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த ஒரு மாடிக் கடை 90 சதவீதத்துக்கும் மேல் எரிந்து நாசமானதாகக் கூறிய அவர்,  அதிகாலை 5.17 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார்.


Pengarang :