ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனையில் இந்தியர்களின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை- கவுன்சிலர் யோகேஸ்வரி தகவல்

ஷா ஆலம், ஜன 28- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டங்களில் அதிகமான இந்தியர்கள் பங்கு கொண்டு பயன் பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி சாமிநாதன் கூறினார்.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நடைபெறும் போது அது குறித்த தகவல்கள் வட்டார மக்களைச் சென்று சேர்வதை உறுதி செய்ய கே.கே.ஐ. எனப்படும் இந்திய சமூகத் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களின் உதவி நாடப்படும் என அவர் சொன்னார்.

இங்குள்ள புக்கிட் கெமுனிங்கில் உள்ள மாநகர் மன்றத்தின் 14 மண்டல அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற மலிவு விற்பனையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தாம் மாநகர் மன்ற உறுப்பினராக பதவியேற்றப் பின்னர் இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைகிறது. சுமார் 300 பேருக்கு‘ தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) இங்கு விற்பனை வைத்த வேளையில்  ஏறக்குறைய அனைத்து பொருள்களும் விற்றுத் தீர்ந்தன என்று சொன்னார்.

இவ்வட்டாரத்தில் அதிக இந்தியர்கள் வசித்த போதிலும், இந்த விற்பனையில் அவர்களின் பங்கேற்பு குறைவாகவே இருந்தது. இந்த விற்பனை குறித்து தங்களுக்கு தெரியவில்லை என்று சிலர் கூறினர். இந்த விற்பனை தொடர்பானத் தகவலை குடியிருப்பாளர் சங்கங்கள் மற்றும் எம்.பி.பி. பிரதிநிதிகள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தோம்.

இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் விற்றுத் தீர்ந்த போதிலும் குறைவான இந்தியர்களின் பங்கேற்பு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. ஆகவே, மாநில அரசின் திட்டங்கள் குறிப்பாக மலிவு விற்பனை தொடர்பான விழிப்புணர்வை  வட்டார மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பொது மக்களும் மாநில அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் அதேவேளையில் இத்தகைய திட்டங்களில் தவறாது பங்கேற்று பயனடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நேற்றைய விற்பனையில் அரசி, கோழி, மீன், சமையல் எண்ணெய், மேகி மீ, காய்கறிகள், கிச்சாப் உள்ளிட்ட பொருள்கள் மலிவான விலை விற்பனைக்கு வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சமையல் பொருள்களுக்கான செலவை பெரிதும் குறைக்க உதவும் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை இவ்வாண்டில் மேலும் மூன்று அல்லது நான்கு தடவை புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், எனினும், பொதுமக்கள் தரும் ஆதரவைப் பொறுத்தே இத்திட்டத்தை அமல்படுத்த இயலும் என்றார்


Pengarang :