SELANGOR

தொழில்முனைவோர் பயிற்சிக்காக ஹிஜ்ரா வெ.300,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 30 – தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை மேலும்
ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு ஏதுவாக இவ்வாண்டில் 20
பயிற்சித் திட்டங்களை அமல்படுத்த யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம்
திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 300,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த 2024
வெற்றி வியூக பயிற்சித் திட்டத்தில் 1,000 தொழில்முனைவோர் பங்கேற்று
பயனடைவர் என எதிர்பார்க்கப்படுவதாக ஹிஜ்ரா அறவாரியத்தின்
தலைமை செயல்முறை அதிகாரி மேரியா ஹம்சா கூறினார்.

ஏ.கே.பி.கே. எனப்படும் கடன் ஆலோசக மற்றும் மேலாண்மை
நிறுவனத்தின் கூட்டாக இணைந்து ஹிஜ்ரா இந்த பயிற்சித் திட்டத்தை
மேற்கொள்ளும். இதில் கடன் மேலாண்மை, சந்தைப்படுத்துதல், வர்த்தக
ஊக்குவிப்பு உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும் என அவர்
தெரிவித்தார்.

இலாபத்தை ஈட்டுவதற்கு ஏதுவாக தங்கள் வர்த்தகத்தை திட்டமிடுவது
தொடர்பில் தொழில்முனைவோருக்குப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக்
கொண்ட இத்திட்டம் இன்று தொடங்கப்படவுள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.

இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த இந்த
பயிற்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
இவ்வாறு கூறினார். இந்த பயிற்சியைத் தொழில்முனைவோர் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தொடக்கி
வைத்தார்.

சுமார் 20,000 வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சியில் 75
பேர் பங்கு கொண்டுள்ளனர். வர்த்தக நடவடிக்கையில் பயன்படுத்தக்கூடிய
வர்த்தக வியூகத்தை தீர்மானிப்பதில் தங்களுக்குப் போதுமான வலிமையும் திறமையான குழுவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்படும் என்று மேரியா சொன்னார்.


Pengarang :