NATIONAL

போலீசாரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற சந்தேகப் பேர்வழி துப்பாக்கிச் சூட்டில் பலி

கோலாலம்பூர், பிப் 1- போலீஸ்காரர்களைப் பாராங்கத்தி கொண்டு மூர்க்கத்
தனமாகத் தாக்க முயன்ற 20 வயது மதிக்கத்தக்க இந்தோனேசிய ஆடவர்
ஒருவர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் ஷா ஆலம், புக்கிட் சுபாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்ததாகச் சிலாங்கூர் மாநிலப்
போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

பத்தொன்பது வயது நிரம்பிய இந்தோனேசிய பெண் ஒருவரின்
கொலையில் அந்த ஆடவர் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாக
அவர் தெரிவித்தார். கொலையுண்ட அப்பெண்ணின் சடலம் எட்டு கத்திக்
குத்துக் காயங்களுடன் பெட்டாலிங் ஜெயா, சுங்கைவேயில் கடந்த
திங்கள்கிழமை கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை
மற்றும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின்
உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று மாலை 5.30 மணியளவில்
சம்பந்தப்பட்ட வீட்டை முற்றுகையிட்டதாக அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

அந்த நடவடிக்கையின் போது அவ்வாடவர் மிகவும் மூர்க்கத்தனமாக
நடந்து கொண்டதோடு பாராங் கத்தியால் போலீஸ்காரர்களைத் தாக்கவும்
முயன்றார். தங்களைத் தற்காத்துக கொள்ளும் நோக்கில் போலீசார்
அவ்வாடரை நோக்கி சுட்டனர் என்றார் அவர்.

அச்சந்தேகப் பேர்வழி சம்பவ இடத்திலியே உயிரிழந்து விட்டதாகக் கூறிய
அவர், 28 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியும் அங்கிருந்து பறிமுதல்
செய்யப்பட்டது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :