NATIONAL

சட்டவிரோத அந்நியக் குடியேறிகளைத் திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் முதல் தேதி அமல்

புத்ராஜெயா, பிப் 1 – நாட்டிற்குள்  சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடராமல் அவர்களை சொந்த சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் திட்டம் எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன்  கூறினார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பும் ஆவணமற்ற குடியேறிகள்  தாங்கள் புரிந்த  குடிநுழைவுக் குற்றங்களுக்கான அபராதத்தைச் செலுத்தியப் பின்னர் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று இங்கு நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைவது, நிபந்தனைகளை மீறுவது மற்றும் அதிக காலம் தங்கியிருப்பது உட்பட ஒவ்வொரு குடிநுழைவு குற்றத்திற்கும் வெ.300 முதல் வெ.500 வரை அபராதம்  விதிக்கப்படும் என அவர் சொன்னார்.

முதலாளிகள்  தங்கள் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக  ஆவணமற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு  விண்ணப்பிக்க வகை செய்யும் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் முன்னதாக அமல்படுத்தியிருந்தது.  இத்திட்டம் கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்தது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அனுமதி முடக்கம் குறித்து கருத்துரைத்த சைபுடின், விவசாயம், உற்பத்தி, கட்டுமானம்,  மற்றும் சேவைகள் (உணவகங்கள்) போன்ற முக்கியமான துறைகளுக்கு  வெளிநாட்டு ஆள்பலம் போதுமானதாக இருப்பதால் அந்த முடக்கத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அந்நியத் தொழிலாளர்களின் விண்ணப்ப முறையை விரைவுபடுத்த ஓரிட சேவை  மையத்தை நிறுவ நேற்றைய  அமைச்சரவைக் கூட்டத்தில்   ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும்  இதனை உள்துறை அமைச்சு வழிநடத்தும்  என்றும் சைபுடின் கூறினார்.


Pengarang :