MEDIA STATEMENTNATIONAL

செராஸ், ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஐந்து வீடுகள் நாசம் 

கோலாலம்பூர், பிப் 12- செராஸ், ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் 70வது புளோக்கின் 17வது மாடியிலுள்ள ஐந்து வீடுகள் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் முற்றாக அழிந்தன.

இந்த தீவிபத்து தொடர்பில் நேற்றிரவு 9.19 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் நோர்டின் பவுஸி கூறினார்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஹாங் துவா தீயணைப்பு நிலையம், பண்டார் துன் ரசாக் தீயணைப்பு நிலையம், ஸ்ரீ ஹர்த்தாமாஸ் தீயணைப்பு நிலையம், புடு தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து 55 உறுப்பினர்கள் அடங்கிய குழு இரு ‘ஏரியல் லெடர் பிளாட்பார்ம்‘ வாகனங்கள் உள்பட ஏழு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

மூன்றாவது வீட்டிலிருந்து பரவியத் தீ இதர நான்கு வீடுகளுக்கும் பரவியதாக நம்பப்படுகிறது எனக் கூறிய அவர், இச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் சொன்னார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 17வது மாடியில் தீ ஏற்பட்டதால் அதனை அணைப்பதில் தொடக்கத்தில் நாங்கள் சிறிது சிரமத்தை எதிர் கொண்டோம். இதன் காரணமாக ‘ஏரியல் லெடர் பிளாட்பார்ம்‘ வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றார் அவர்.

எனினும், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையினால் இரவு 11.22 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் பொது தற்காப்புப் படை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தைச் சேர்ந்த 39 உறுப்பினர்களும் தங்களுக்கு உதவி வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த தீவிபத்து குறித்து கருத்துரைத்த  செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாம் ஹலிம் ஜமாலுடின், இந்த தீவிபத்துக்கு கீழறுப்புச் செயல் காரணமல்ல என்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

 


Pengarang :