MEDIA STATEMENTNATIONAL

‘டத்தோ‘ விருதுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க சட்டத்தில் திருத்தம் 

கோலாலம்பூர், மார்ச் 2- நடப்பிலுள்ள 2017 ஆம் ஆண்டு விருதளிப்பு சட்டத்தின் (சட்டம் 787) சில ஷரத்துகளில் திருத்தங்களைச் செய்வதற்கான பரிந்துரையை மலேசிய டத்தோக்கள் மன்றம் (எம்.டி.டி.எம்.) சட்டத் துறை அலுவலகம் மற்றும் பிரதமர் துறை அமைச்சிடம் (சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்) சமர்ப்பித்துள்ளது.

உயரிய விருதுகள் மற்றும் பட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் முறைகேடுகள் நிகழ்வதை தடுப்பதற்கு ஏதுவாக சட்ட அமலாக்கம் மேலும் பயனுள்ளதாகவும் ஆக்ககரமான தாகவும் ஆக்கும் நோக்கில் இந்த பரிந்துரை முன்வைக்கப் பட்டுள்ளதாக எம்.டி.டி.எம் தலைவர் டத்தோ அவாலான் அஜிஸ் கூறினார்.

உயரிய விருதுகள் பட்டங்களைத் தவறாக பயன்படுத்துவோர் கைது செய்து அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை திறக்கும் அதிகாரத்தை போலீசாருக்கு வழங்குவது மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு ஏதுவாக இவ்விவகாரதைச் சட்டத் துறைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுச் செல்வது உள்ளிட்ட அம்சங்களை அந்த உத்தேச சட்டத் திருத்தப் பரிந்துரை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இத்தகைய குற்றங்களைப் புரிவோரை போலீசார் கைது செய்ய முடியுமா என்பது குறித்து தற்போதையச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவுக்கு நேற்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

போலி விருதுகளை வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் அதிகமானப் புகார்கள் பொது மக்களிடமிருந்து கிடைத்து வருவதால் உரிய விருதுகள் மற்றும் பட்டங்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விவகாரத்தை தாங்கள் கடுமையாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.

போலி விருதுகளை வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட சுமார் 200 மோசடிச் சம்பவங்கள் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதை தங்கள் சங்கத்தின் தரவுகள் காட்டுகின்றன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :