ANTARABANGSAMEDIA STATEMENT

இந்தோ. அதிபர் பிராபோவோவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 21- இந்தோனேசிய அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வெற்றியாளர் என நேற்று அறிவிக்கப்பட்ட பிராபோவோ சுபியான்தோவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குகிறார்.

அதிபராக வெற்றி பெற்ற பிராபோவோவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு  இந்தோனேசியாவுக்கு சுபிட்சத்தையும் சிறப்பான மற்றும் தொடர்ச்சியான மேம்பாடுகளையும் கொண்டு வருவார் எனத் தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபியான்தோவை நான் நேற்று தொடர்பு கொண்டு அண்மையில் நடைபெற்ற தேர்தல் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தேன். 

தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டப் பின்னர் வாழ்த்துத் தெரிவித்த முதலாவது தலைவர் நான் என கூறப்பட்டது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கமான மற்றும் முக்கிய அண்டை நாடாக விளங்கும் இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நட்புறவின் அடையாளமாக விளங்கும் காரணத்தால் இந்த நட்புறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

அண்டை நாடுகள் என்ற முறையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த தாமும் அதிபர் பிராபோவோவும் உறுதி பூண்டுள்ளதோடு அனைத்துலக அரங்குகளில் குறிப்பாக ஆசியானில் ஒத்துழைப்பை நல்கவும் இணக்கம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2024 இந்தோனேசிய அதிபர் மற்றும் துணையதிபர் தேர்தலில் பிராபோவோ-கிப்ரான் ராக்காபூமிங் கூட்டணி வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.


Pengarang :