MEDIA STATEMENTNATIONAL

காஸா போர் நிறுத்தப் பேச்சில் பங்கேற்க ஹமாஸ் பேராளர் குழு இன்று கெய்ரோ பயணம்

கெய்ரோ ஏப் 7- காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஹமாஸ் இயக்கத்தின் துணைத் தலைவர் காஹ்லில் அல்-ஹாய்யா தலைமையிலான பேராளர் குழு இன்று கெய்ரோ செல்கிறது. எகிப்திய சமரசப் பேச்சாளர்கள் அழைப்பை ஏற்று தாங்கள் அப்பயணத்தை மேற்கொள்வதாக ஹமாஸ் அறிக்கை ஒன்றில் கூறியது.

இன்று நடைபெறும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர் பில் பெர்ன்ஸ் நேற்று கெய்ரோ வந்தடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த அமைதிப் பேச்சு, கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக எகிப்திய அல்-குஹேரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமல் செய்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு மன்றம் கடந்த மார்ச் 25ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் அதாவது மார்ச் 14ஆம் தேதி முன்வைத்த  கோரிக்கைகளை ஹமாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நிரந்தரப் போர் நிறுத்தம், காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் மீட்கப்பட வேண்டும், இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும், காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்கப் படுவதற்கு ஏதுவாக பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஹமாஸ் முன்வைத்துள்ளது.


Pengarang :