MEDIA STATEMENTNATIONAL

பட்டாசு வெடித்ததால் நோன்புப் பெருநாள் சந்தையில் களேபரம் – இரு ஆடவர்கள் கைது

அலோர் ஸ்டார், ஏப் 10- சுங்கை பட்டாணி நோன்புப் பெருநாள் சந்தை  அருகே உள்ள டத்தாரான் ஜீரோவில் நேற்று நள்ளிரவில் பெரும் வெடிச் சம்பவம் நிகழும் அளவுக்கு  பொது இடத்தில் பட்டாசு மற்றும் வாணவெடிகளை வெடித்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட இடத்தில் பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் வெடிக்கப்பட்டது குறித்து   நள்ளிரவு 12.00  மணியளவில் சுங்கை பட்டாணி காவல் நிலையத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரியிடமிருந்து தங்களுக்கு  தகவல் கிடைத்ததாக கோல மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜைடி சே ஹாசன் கூறினார்.

அவ்விடத்தில் பட்டாசு மற்றும் வாணவெடி வெடிக்கப்படுவதைச் சித்தரிக்கும்  43 வினாடி காணொளி வழி இச்சம்பவம்  குறித்த தகவலை அந்த அதிகாரி பெற்றார்.

அந்த இடத்தில் “ஹேப்பி பாம்ப் ஃபையர்வோர்க்” ரக பட்டாசு   ஒன்று  வெடிக்கப்பட்டதாகவும்  அந்த ​​பட்டாசு கவிழ்ந்தால் அதன் இலக்கு மாறி அருகிலிருந்த  பட்டாசு குவியலில் பட்டு பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது என்றும் அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த வெடிப்பினால் அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.  இருப்பினும் அந்த இடத்தில் தீச்சம்பவம்  அல்லது  பொதுமக்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை   என்பதை சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பில்  27 வயது பட்டாசு விற்பனையாளர் மற்றும் பட்டாசைக்  கொளுத்திய 24 வயது ஆடவர் ஆகிய இருவரை போலீஸார் மேல் நடவடிக்கைக்காக கைது செய்தனர்.


Pengarang :