ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வர்த்தக மீட்சிக்கு உதவ ஹிஜ்ரா தொழில் முனைவோருக்கு கடன் மறுசீரமைப்புத் திட்டம்

ஷா ஆலம், ஏப் 11-  நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள உறுப்பினர்கள் தவணை முறையில் கடனைத் திரும்பச் செலுத்துவதற்குரிய மீட்சித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது.

ஹிஜ்ரா அறவாரியத்தில் கடன் பெற்றுள்ள தொழில்முனைவோர் தவணை கடன் முறையை மறுசீரமைப்பு செய்வதற்கு அருகில் உள்ள ஹிஜ்ரா அலுவலகங்களை அணுகலாம் என்று அந்த கடனளிப்பு நிறுவனம் கூறியது.

கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான அட்டவணையை மறுசீரமைப்பு செய்வதற்கு ஏதுவாக உங்களுக்கு மீட்சித் திட்டத்தை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள  12 ஹிஜ்ரா அலுவலகங்களில் உள்ள கடன் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று அது தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

ஹிஜ்ரா உறுப்பினர்கள் தங்கள் கடன் பாக்கி தொடர்பான விபரங்களை  https://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம்  அறிந்து கொள்ளலாம்.

கடன் தொடர்பான  உதவிகளை பெற விரும்புவோர்
https://www.hijrahselangor.com/risalah-skim-hijrah…/  என்ற அகப்பக்கம் மூலம் இதன் தொடர்பான பிரசுரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

கடன் தொகையை தவறாது தவணை முறையில் செலுத்தி வரும் தொழில் முனைவோருக்கு ஹிஜ்ரா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அந்த சுழல் நிதியைக் கொண்டு இதர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்கு உதவும் வகையில் கடன் பெற்றவர்கள் தவணை பணத்தை முறையாகச் செலுத்துவது அவசியமாகும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது.

ஹிஜ்ரா அறவாரியத்தின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக கடன் பெற்றுள்ள 87,000 பேரில் 78 விழுக்காட்டினர் தவணைப் பணத்தை முறையாகச் செலுத்தி வருவதாகவும் ஹிஜ்ரா கூறியது.

சிறிய அளவில் வர்த்தகத்தை தொடங்க விரும்பும் அல்லது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் பல்வேறு கடனுதவித் திட்டங்களை ஹிஜ்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி இவ்வாண்டு தொழில்முனைவோருக்கு 10 கோடி வெள்ளி கடன் வழங்க ஹிஜ்ரா  இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிஜ்ரா அறவாரியம் சிறிய அளவில் வர்த்தகத்தை தொடங்குவோர் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவோருக்கு கடனுதவி வழங்கி வருகிறது.


Pengarang :