ECONOMYMEDIA STATEMENT

வர்த்தக, முதலீட்டுத் துறைகளில் உறவை வலுப்படுத்த மலேசியா-பாகிஸ்தான் இணக்கம்

கோலாலம்பூர், ஏப் 11- இரு வழி உறவுகளை குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய மலேசியாவும் பாகிஸ்தானும் இணக்கம் கண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்றிரவு தம்மை  தொலைபேசி வழி தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஷ்  ஷாரிப், இந்த நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாக அவர் சொன்னார்.

இந்த சந்திப்பின் போது மலேசியா-பாகிஸ்தான் உறவுகளை குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் வலுப்படுத்துவதில் ஒருமித்த கருத்தை நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என அன்வார் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவுக்கு ஹலால் இறைச்சியை ஏற்றுமதி செய்யும் அந்நாட்டின் பரிந்துரையை தாம் வரவேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு தவிர்த்து காஸா, ஆப்கானிஸ்தான் உள்பட வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் தாங்கள் விவாதித்ததாக அவர் சொன்னார்.

பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாட்டை பாகிஸ்தான் பிரதமர் வரவேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெறுவதில் உள்ள விருப்பத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். பாகிஸ்தானுக்கு கூடிய விரைவில் வருகை புரியும்படி பிரதமர் ஷாபேஷ் என்னைக் கேட்டுக் கொண்டார் என்றும் அன்வார் சொன்னார்.


Pengarang :