ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெருநாள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு சகாக்கள் சாலை விபத்தில் பலி

குவாந்தான், ஏப் 11- நோன்புப் பெருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடிவிட்டு தலைநகர் திரும்பிக் கொண்டிருந்த இரு நண்பர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சென்ட்ரல் ஸ்பைன் சாலையின் (சி.எஸ்.ஆர்.) கோல லிப்பிஸ் நோக்கிச் செல்லும் தடத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.

பாதுகாவலர்களாக பணி புரியும் முகமது மஸூவான் மாட் ஜிட் (வயது 44) மற்றும் அவரின் சகாவான கிஸ்னாவித்தா சஹாட் (வயது 46) ஆகிய இருவரும் கிளந்தானில் நோன்புப் பெருநாளை கொண்டாடிவிட்டு சுங்கை பூலோவில் உள்ள தங்கள் இல்லத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது என்று லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் இஸ்மாயில் மான் கூறினார்.

அவ்விருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சிமெண்டிலான சாலையின் மையத் தடுப்பை மோதியதில் அவர்கள் வண்டியிலிருந்து  தூக்கி எறியப் பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு  சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

 


Pengarang :