MEDIA STATEMENTNATIONAL

ஆயுதம் வைத்திருந்ததாக இஸ்ரேலிய ஆடவர் மீது குற்றச்சாட்டப்பட்டது

கோலாலம்பூர், ஏப் 12-  இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 6 துப்பாக்கிகளை கடத்தியதாகவும் 158 தோட்டாக்களை வைத்திருந்ததாகவும்  இஸ்ரேலிய ஆடவர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி தஸ்னிம் அபு பக்கர் முன்னிலையில்  இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட போது 38 வயதான அவிட்டன் ஷாலோம் என்ற அந்த ஆடவர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி மாலை மணி 6.46க்கும் 28ஆம் தேதி மாலை 6.00 மணிக்கும் இடையே, ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆறு சுடும் ஆயுதங்களைக் கடத்தியதாக  அவர் மீது முதலாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

. குற்றவாளி என  நிரூபிக்கப் பட்டால்  குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஆறுக்கும்   குறையாத பிரம்படி  விதிக்க  வகை செய்யும்  1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் (கடும் தண்டனைகள்)  (சட்டம் 37) பிரிவு 7(1)ன் கீழ் அவ்வாடவர்  மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அதே இடத்தில், அதே தேதி  மற்றும் நேரத்தில் சுடும் ஆயுத அனுமதி அல்லது ஆயுத அனுமதியின்றி 158 பல்வேறு ரகங்களில் தோட்டாக்களை வைத்திருந்ததாக அவர் இரண்டாவது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 வெள்ளிக்கும் மிகாத அபராதம் அல்லது இரண்டுமே  விதிக்க  வகை செய்யும் 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் (சட்டம் 206)  8(ஏ) பிரிவின் கீழ அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டிற்கு ஜாமீன் வழங்க முடியாது என்பதால் துணை அரசு வழக்கறிஞர் முகமட் முஸ்தபா பி.குனியாலம்  ஜாமீன் தொடர்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.

 குற்றம் சாட்டப்பட்ட நபர்  சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்  நவின்ஜித் சிங் மற்றும் ஜெஃப்ரி ஓய் ஆகியோர் அரசுத் தரப்பின் முடிவை ஆட்சேபிக்கவில்லை. இந்த வழக்கின் மறு விசாரணையை நீதிமன்றம் வரும்  மே 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Pengarang :