ECONOMYMEDIA STATEMENT

போலீஸ் நிலையத் தாக்குதல்- இரு மாணவர்கள் விடுவிப்பு, ஐந்து குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரணை

ஜோகூர் பாரு, மே 22- இரு போலீஸ்காரர்களைப் பலி கொண்ட உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர்.

சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடமிருந்து உத்தரவு கிடைத்ததைத் தொடர்ந்து 22 வயதான தனியார் உயர்கல்விக்கூட மாணவரும் 21 வயது பயிற்சிக் கல்லூரி மாணவரும் விடுவிக்கப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம்.குமார் கூறினார்.

அவ்விரு மாணவர்களும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும், சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடமிருந்து உத்தரவு கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர் என்றார் அவர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சமூக ஊடங்களில் கருத்துகளை வெளியிடுவதன் மூலம் ஆருடங்களை அல்லது உண்மையை திரித்துக் கூறுவதை தவிர்க்கும்படி பொது மக்களுக்கு அவர் நினைவுறுத்தினார். இத்தகையச் செயல்கள் பொது அமைதிக்கு குந்தகம்  விளைவிக்கும் என்பதோடு போலீசாரின் விசாரணையையும் பாதிக்கும் என்று அவர் சொன்னார்.

கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.45 மணியளவில் நிகழ்ந்த அந்த தாக்குதல் சம்பவத்தில் கான்ஸ்டபிள் அகமது அஸ்சா அகமது அஸ்ஹார் (வயது 22) மற்றும் கான்ஸ்டபிள் முகமது ஷியாபிக் அகமது சைட் (வயது 24) ஆகியோர் உயிரிழந்ததோடு கார்ப்ரல் முகமது ஹஸிப் ரோஸ்லான் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழியின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட எழுவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


Pengarang :