MEDIA STATEMENTNATIONAL

அல்-அவ்டா மருத்துவமனை மீது இஸ்ரேல் முற்றுகை- மருத்துவப் பணியாளர்கள் வெளியேற்றம்

காஸா நகர், மே 24- காஸா தீபகற்பத்தின் வட பகுதி நகரான ஜபாலியாவில் உள்ள அல்-அவ்டா மருத்துவமனையை இஸ்ரேலிய துருப்புகள் முற்றுகையிட்டுள்ளன. இந்த முற்றுகை நிகழ்ந்த நான்கு நாட்களான நிலையில் அந்த மருத்துவமனையிலுள்ள பணியாளர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அத்துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

மருத்துவப் பணியாளர் ஒருவரை இஸ்ரேலிய இராணுவம் பிடித்துள்ள நிலையில் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் காஸா நகரின் மேற்கு பகுதிக்கு இடம் பெயரும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

தற்போது அந்த மருத்துவமனையில் 14 மருத்துவப் பணியாளர்கள், 11 நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்போர் உள்ளனர். ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் அவர்களால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் காரணத்தால் காஸாவின் வட பகுதியில் சுகாதாரச் சேவை முற்றிலும் முடங்கி விட்டதாக காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் கடந்த புதன் கிழமை கூறியது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் தீவிரத் தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த போரில் இதுவரை 37,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்களாவர். இந்த தாக்குதல்களில் மேலும்  80,000 பேர் காயமடைந்துள்ளனர்.


Pengarang :