ANTARABANGSAMEDIA STATEMENT

ராஃபா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு ஐ.சி.ஜே. உத்தரவு- மலேசியா வரவேற்பு

கோலாலம்பூர், மே 25-  ராஃபா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்பட  அனைத்துலக  நீதிமன்றத்தின் (ஐசிஜே) கூடுதல்  இடைக்கால நடவடிக்கைகளை  மலேசியா வரவேற்றுள்ளது.

மனிதாபிமான உதவிகளை தடையின்றி விநியோகிப்பதற்கு ஏதுவாக  ராஃபாவில் எல்லை கடப்பு வாயிலைத் திறக்க இஸ்ரேலுக்கு அனைத்துலக  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில்  வெளியுறவு அமைச்சு கூறியது .

காஸாவில் இனப்படுகொலையை தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பாக அனைத்துலக நீதிமன்றம் வழங்கிய கூடுதல் இடைக்கால நடவடிக்கையை மலேசியா வரவேற்கிறது.

அனைத்துலக நீதிமன்றத்தின்   செய்த கூடுதல் இடைக்கால நடவடிக்கைகளுக்கு  இஸ்ரேல் இணங்குவதை உறுதி செய்ய  அந்நாட்டிற்கு  எதிரான நெருக்குதலை   அதிகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை மலேசியா கேட்டுக் கொள்கிறது. இந்த  உத்தரவை இஸ்ரேல் பின்பற்றத் தவறுவது அனைத்துலகச் சட்டத்தை ஏளனப்படுத்துவதற்கு ஒப்பானதாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஸாவில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) உத்தரவிட்டுள்ள எந்தவொரு விசாரணை ஆணையம், உண்மை கண்டறியும் குழு  அல்லது விசாரணை அமைப்புக்கு தடையில்லா அனுமதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஐ.சி.ஜே. இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த  உத்தரவு தொடர்பாக இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு அந்நாட்டிற்கு  ஐ.சி.ஜே. உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Pengarang :