SELANGOR

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு- போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், ஜூன் 7- வெள்ளப் பேரிடர் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்படும்
மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக போர்ட்
கிள்ளான் தொகுதியில் வெள்ளம் அபாயம் உள்ள இடங்கள் அணுக்கமாக
கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

போர்ட் கிள்ளான் நிலையத்தில் கடல் பெருக்கு ஏற்படும் என அறிவிப்பு
வெளியாகியிருந்த நிலையில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் இதுவரை
திடீர் வெள்ளம் தொடர்பில் எந்த புகாரையும் தாங்கள் பெறவில்லை என்று
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான்ஹூரி கூறினார்.

தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் பகுதிகளில் கம்போங் தெலுக் கோங்,
கம்போங் பூலாவ் இண்டா, தாமான் தெலுக் கெடோங் இண்டா, தாமான்
செலாட் செலாத்தான், தாமான் செலாட் டாமாய் மற்றும் பண்டமாரான்
ஜெயா பகுதி ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

கடல் பெருக்கும் ஏற்படும் சமயங்களில் அடை மழையும் பெய்யும் போது
கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது
என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல் பெருக்கு ஏற்படும் சமயங்களில் கடல் நீர் கரையில்
பெருக்கெடுக்கமாமல் இருப்பதற்காக மதகுகள் மூடப்படுகின்றன. அதே
சமயம் கன மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் கடலுக்குள் செல்ல
முடியாமல் வெள்ளம் ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

வெள்ள அபாயத்தை தவிர்ப்பதற்கு ஏதுவாக தங்கள் குடியிருப்புகளைச்
சுற்றியுள்ள வடிகால்கள் குப்பைகளால் அடைபடாமலிருப்பதை உறுதி
செய்யும்படி குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வீடுகளை புனரமைப்பு செய்வோர் கட்டுமானக் கழிவுப் பொருள்களை
குறிப்பாக மணலை முறையான இடங்களில் வீச வேண்டும். காரணம் மணல் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால் நீரோட்டம் தடை பட்டு வெள்ளம் ஏற்படுகிறது என்றார் அவர்.


Pengarang :