ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உள்நாட்டு வருமான வரி வாரிய பணியாளர்கள் ஊழலுக்கு எதிராக உறுதி மொழி

புத்ராஜெயா, ஜூன் 22- உள்நாட்டு வருமான வரி வாரிய பணியாளர்கள் நேற்று ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டதோடு அதன் தொடர்பான வாக்குறுதிப் பத்திரத்திலும் கையெழுத்திட்டனர். தங்கள் பணியில் உயர்நெறியைக் கட்டிக்காக்கும் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் நோக்கில் இந்த உறுதி மொழியை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.

உள்நாட்டு வருமான வரி வாரிய தலைவரும் கருவூலத் தலைமைச் செயலாளருமான டத்தோ ஜோஹான் மரைக்கான், தலைமை கணக்காய்வாளர் நோர் யாத்தி அகமது தாரிக் ஜமாலுடின், வருமான வரி வாரியத்தின் தனி ஆலோசகர் டத்தோ நோர் அஜிசான் அப்துல் ஹமிட் ஆகியோர் முன்னிலையில் இந்த உறுதி மொழிச் சடங்கு நடைபெற்றதாக அவ்வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இந்த நிகழ்வை பார்வையிட்டார்.

கடந்த 2022 முதல் ஊழல் எதிர்ப்பு மேலாண்மை முறையினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்த உறுதி மொழி, தவறான மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதிலும் நிர்வாகத் தலைமைத்துவ பணியாளர்கள் தங்கள் பொறுப்புகளை கூடுதல் அக்கறையுடன் நிறைவேற்றுவதையும் உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியது.

இதனிடையே, இந்த ஊழல் எதிர்ப்பு உறுதி மொழியை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் எடுத்து வரும்  முதலாவது அரசாங்க நிறுவனமாக உள்நாட்டு வருமான வரி வாரியம் விளங்க்குவதோடு  வாக்குறுதி பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக  அஸாம் பாக்கி தெரிவித்தார்.

உள்நாட்டு வருமான வரி வாரியம் மற்றும் ஊழல் தடுப்பு நிறுவனத்திற்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு வரி வசூலிப்பை அதிகரிப்பதற்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் துணை புரியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :